பெண்களின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பும் மர்மநபர் குளச்சல் போலீசார் தீவிர விசாரணை

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கணக்கு விவரங்களை கேட்டு அதன்மூலம் பணம் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதனால் அனைத்து வங்கிகளும் வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் கூறாதீர்கள். அப்படி யாராவது கேட்டால் வங்கியில் நேரில் வந்து விளக்கம் கேளுங்கள் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே குளச்சல் அருகே கொட்டில்பாடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்மநபர், அந்த பெண்ணிடம் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், அந்த பெண்ணின் செல்போனுக்கு ஒரு பெண்ணின் ஆபாச படத்தை அனுப்பி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஆபாச படம் அனுப்பிய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஆசாத் நகரை சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போன் எண்ணில் பேசிய மர்ம நபர், அவரிடமும் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே அந்த பெண்ணின் செல்போனுக்கு ஆண் ஒருவரது ஆபாச படத்தை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குளச்சல் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுதொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச படங்கள் அனுப்பிய மர்மநபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply