சீன பொருட்களை தெருவில் எறிந்து, தீயிட்டு கொளுத்திய தமிழ் இயக்குனர்!

சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்கள் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை தடுக்க முயன்ற போது இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவின் இந்த அத்துமீறலை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் சீன பொருட்களை தீயிட்டு எரித்து கொளுத்தி வருகின்றனர். மேலும் சீனாவின் தயாரான செயலிகளையும் தங்கள் மொபைல்களில் இருந்து டெலிட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனர் சக்தி சிதம்பரம் தனது அலுவலகத்தில் இருந்த சீன பொருட்களை தெருவில் தூக்கி எறிந்து அவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறியதாவது: லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து, தமிழ் மண்ணைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாகக் கொன்ற சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இதுவரை உபயோகித்த அனைத்து சீனப் பொருட்களையும் தீயிட்டு, கொளுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் சீன பொருட்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் உயிர்நீத்த தியாகிகளுக்கு நிஜமான நினைவாஞ்சலியாக இருக்கும். முன்னுதராணமாக இருக்க வேண்டும் என்று என் அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை, வாசலில் கொட்டி தீயிட்டு எரித்தேன். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகை சாக்ஷி அகர்வால், சனம் ஷெட்டி உள்பட பலர் தங்கள் சீன செயலியான டிக் டாக் செயலி கணக்குகளை டெலிட் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply