சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக குமரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தவர்கள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் இருவரும் இறந்ததாக உறவினர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு இழப்பீடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரியும் நேற்று குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நாகர்கோவில் வடசேரி சந்தை உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நாகர்கோவில் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் செல்போன் கடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அலெக்சாண்டிரா பிரஸ் ரோடு மொபைல் சங்கம் சார்பில் ஆங்காங்கே பேனர்கள் வைத்திருந்தனர்.

அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

மேலும் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சங்க தலைவர் செய்யது அலி தலைமையில் நிர்வாகிகள் சமூக விலகலை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தும் அமைதி ஊர்வலம் சென்றனர். இறுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் கோட்டார் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

மேலும் கன்னியாகுமரி, பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, வேர்க்கிளம்பி, மஞ்சாலுமூடு, கருங்கல், அஞ்சுகிராமம், மயிலாடி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாக வணிகர் சங்க பேரவையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் டேவிட்சன் கூறுகையில், குமரி மாவட்டத்தில் அனைத்து வகையான வணிகம் சார்ந்த கடைகள் மொத்தம் 15 ஆயிரம் உள்ளன. அவற்றில் மேற்கண்ட பகுதிகளில் 65 சதவீத கடைகள் அதாவது சுமார் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்றார்.

வக்கீல் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தந்தை- மகன் இறந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரியும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு டாக்டர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றவழக்குப் பதிவு செய்ய வேண்டும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியும் நேற்று நாகர்கோவில் வக்கீல் சங்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் கோர்ட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் உதயகுமார், கூட்டுக்குழு பொறுப்பாளர் மதியழகன், மூத்த வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், மரியஸ்டீபன், டி.கே.மகேஷ், மாதவன்பிள்ளை, பாலாஜி, ராஜாராம், அலோசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply