குமரியில் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும் எம்பி, 6 எம்.எல்.ஏ.க்கள் திடீர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஆளும் கட்சி சார்பில் அடிக்கல் நாட்டு விழா அரசு பொது நிகழ்ச்சிகள் குடிமராமத்து பணி ஆகியவை நடந்து வருகிறது. இதில் பல்வேறு அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தில் அதிகமான பொதுஜனங்கள் கலந்து கொள்வதால் சமூக இடைவெளி இன்றி கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு அரசு பொது நிகழ்ச்சிகள் ஆளுங் கட்சி சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கிறது. இதனால் மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான எம் பி வசந்தகுமார், எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் சேர்ந்து கூட்டாக  அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது ,  தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் நோய் பரவுவதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதம் வரை 16 பேர் என்ற நிலையில் தற்போது ஒரு மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து நேற்றைய தினம் வரை 235 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் வெளி மாவட்டங்களில் இருந்து பலபேர் முறையாக அனுமதி பெறாமல் மாற்றுப் பாதைகளில்  மாவட்டத்திற்குள் வந்து கிராமங்களில் தங்கள் இல்லத்திற்கு வந்து விடுகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படாததால் அவர்களில் யாராவது ஒருவருக்கு இந்நோய் பாதிப்பு இருக்குமேயானால் அவர்கள் மூலமாக பல பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது இதனால் யார் மூலமாக நோய் பரவுகிறது என்பதை கண்டறிய முடிவதில்லை இந்த நிலை நீடிக்குமானால் கொரோனா  சமூக தொற்றாக  மாறிவிடும்.

எனவே மாவட்ட நிர்வாகம் இன்னும் கூடுதல் கண்காணிப்புடன் பரிசோதனை இந்தி வெளி மாவட்டத்தில் இருந்து யாரும் மாவட்டத்திற்குள் வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இந்த நோய் சமூக தொற்றாக மாறுமேயானால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும் நமது மாவட்டத்தில் உள்ள மருத்துவர்களையும் மருத்துவ உபகரணங்களை வைத்து நோய் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே சமூக தொற்று ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிவதோடு  சமூக இடைவெளியையும் உறுதியோடு கடைபிடிக்க வேண்டும்.

Leave a Reply