தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழப்பு – தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே, கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிங்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் தந்தை ஜெயராஜ் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி.யிடம் திமுக் எம்.பி கனிமொழி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply