கொரோனா தடுப்பு பணியில் ஆயுஷ்துறை மருத்துவர்களை செயல்படுத்துவது குறித்து தளவாய்சுந்தரம் ஆலோசனை

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான சத்தான உணவு மற்றும் ஆயுஷ் துறையின் கீழுள்ள, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி, நேச்சரோபதி ஆகியவற்றில் பணிபுரிகின்ற மருத்துவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்திய நுகர்வோர் பிரச்சினை தீர்வு மைய தேசிய செயலாளரும், பேரிடர் மேலாண்மை இயக்குனருமான எம்.எம்.அப்துல் காதர், ஓமியோபதி பேராசிரியர் மோகன செல்வன் ஆகியோர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் தற்போதைய கொரோனா காலத்தில், குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி, நேச்சரோபதி உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின், கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பது, தேவையான சத்தான உணவுகள் கொடுப்பது ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற, ஆலோசனையின் போது, மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண் தங்கம், சமூகமறு சீரமைப்புமைய இயக்குனர் முனைவர் டி.எஸ்.ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply