குமரி மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்க வேண்டும் கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அப்போது அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் வருகிற 1-ந் தேதிக்குள் தூத்துக்குடிக்கு கப்பலில் வர இருக்கிறார்கள். அவர்களை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று குமரி மாவட்டத்தில் அதிகமாக பரவுவதற்குவெளியூர்களில் இருந்து அதிகமானோர் வருவதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனையில் இருந்து தப்பிப்பதற்காக நெல் லை வரை கார்களில் வந்துவிட்டு, அங்கிருந்து பஸ்களில் ஏறி குமரிக்கு வந்து விடுகிறார்கள். எனவே குமரி மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களிலாவது சுவரொட்டிகளை ஒட்ட அனுமதிக்க வேண்டும். சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் கொடுத்துள்ள சில வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் ஏஜெண்டுகளை வைத்து மிரட்டி பணம் செலுத்த வலியுறுத்துகிறார்கள். இதை கொரோனா காலம் முடியும் வரை தடுத்து நிறுத்த வேண்டும். நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு மேம்பாலம், தக்கலை மேம்பாலம் ஆகியவை தேவையில்லை. நான்கு வழிச்சாலை பணியை மட்டும் வேகப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர், ஈரான் நாட்டில் இருந்து கப்பலில் வரும் மீனவர்கள் தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் அழைத்து வரப்படுவார்கள் என்றும், அவர்களை குமரியில் தங்க வைக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளியில் வந்த வசந்தகுமார் எம்.பி. மேற்கண்ட கோரிக்கைகள் பற்றி நிருபர்களிடம் விளக்கினார். அப்போது எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.

Leave a Reply