பங்குதந்தையை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தூத்தூர் மீனவ கிராமத்தில் பாதிப்பு 9 ஆக உயர்வு

தூத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் நர்சிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு சென்ற அவர் வீட்டிலேயே இருந்தார். காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே சென்றதாக தெரிகிறது. இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மாணவியின் தாத்தா, மாமா, உறவினரின் 3 வயது குழந்தை ஆகியோருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அப்பகுதியை தனிமைப்படுத்தி கிருமி நாசினி தெளித்தல் மற்றும் பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த 37 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 35 வயதுடைய தூத்தூர் பங்குதந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனவ கிராமத்தில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தூத்தூர் கிராமம் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

சுகாதாரத்துறை ஊழியர்கள் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பங்குதந்தைக்கு தொற்று எப்படி பரவியது என்பது தெரியவந்துள்ளது.

பங்குதந்தை சமீபத்தில் கேரளாவுக்கு சென்று வந்ததாகவும், மேலும், சென்னையில் இருந்து ஊர் திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதன்மூலம் பங்குதந்தைக்கு தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட 2 சுகாதார பணியாளர்கள் பங்குதந்தையுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பங்குதந்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பினிஸ் ஜோசப் தலைமையிலான மருத்துவக் குழுவினர், இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை பகுதி பங்குதந்தை, இணை பங்கு தந்தை, அருட் சகோதரிகள் மற்றும் தூத்தூர் பங்குபேரவை நிர்வாகிகள் என பலரிடம் இருந்து சளி, ரத்தம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பங்குதந்தை வாட்ஸ்-அப்பில் மலையாளத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் பலர் கடந்த நாட்களில் என்னை சந்தித்துள்ளனர். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தூத்தூர் பகுதியை சேர்ந்த 40 பேரிடம் இருந்து நேற்று முன்தினம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 33 வயது, 40 வயது, 44 வயது, 54 வயது என 4 ஆண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தூத்தூர் பகுதிக்கு ஆம்புலன்சுடன் சென்று 4 பேரையும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் தூத்தூர் கிராமத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மேலும் 40 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. தூத்தூர் பகுதியில் தினமும் தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply