தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை- கமல்ஹாசன்!

உடுமலைப்பேட்டையில் கவுசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கில், கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும் திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் அவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


உடுமலை சங்கர் கொலை சம்பந்தமான அனைத்து வழக்கின் தீர்ப்புகளும் இன்று வெளியானது. அதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும் மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்நிலையில் இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply