குமரி வந்த பெண்ணுக்கு கொரோனா: சேனங்கோடு பகுதியை தனிமைப்படுத்தி சாலைகள் அடைப்பு

விருதுநகரில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படந்தாலுமூடு அருகே சேனங்கோடு பகுதியை அதிகாரிகள் தனிமைப்படுத்தி சாலைகளை தடுப்பு வேலியால் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் படந்தாலுமூடு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் படந்தாலுமூடு அருகே சேனங்கோட்டில் வசித்து வந்தார். மனைவி முழு ஊரடங்கின் போது சொந்த ஊரான விருதுநகரில் இருந்தார். தற்போது, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையொட்டி ரெயில் மூலம் நாகர்கோவில் வந்தார்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரித்தபின்பு படந்தாலுமூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்றுமுன்தினம் பரிசோதனை முடிவு வெளியான போது, மேலாளர் மனைவிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சேனங்கோடு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தனிமை படுத்தினர். படந்தாலுமூட்டில் இருந்து சேனங்கோடு செல்லும் சாலை தடுப்பு வேலியால் மூடப்பட்டது. பெண்ணின் கணவர், மகள் மற்றும் அக்கம் பக்கத்தில் தொடர்பில் இருந்த நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு பஞ்சாயத்து தலைவி லைலா, மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவினர். மேலும், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply