குமரி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரியகிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வில் சூரியனின் கதிர்கள் பூமியில் விழாதவாறு சந்திரன் மறைக்கும். இந்தியாவில் நேற்று சூரியகிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்கியது. மாலை 3.04 மணி வரை கிரகணம் இருந்தது.

இதே போல தமிழகத்தில் காலை 10.15 மணிக்கு தொடங்கியது. பகல் 11.45 மணி முதல் 12 மணி வரை கிரகணம் உச்சத்தை அடைந்தது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்தும், தெரு மற்றும் சாலைகளில் நின்றும் பார்த்தனர். வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் சூரிய கண்ணாடி, எக்ஸ்ரே சீட் உள்ளிட்டவற்றால் பார்த்து ரசித்தனர். குமரி மாவட்டத்தில் வழக்கமாக சூரிய கிரகணத்தை காண கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த முறை அதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

அதே சமயம் சுங்கான்கடையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலக வளாக பகுதியில் சூரியகிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சூரியனை பார்க்க பயன்படுத்தப்படும் விசேஷ கருவி மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர். அப்போது சமூக இடைவெளியையும் பின்பற்றினர். குமரி மாவட்டத்தில் திடீரென மேகம் வந்து கிரகணத்தை மறைத்தது. இதனால் சூரியகிரகணம் சரிவர தெரியாமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply