விளவங்கோடு தொகுதியில் ரூ.23½ கோடியில் சாலை சீரமைப்பு பணி விஜயதரணி எம்.எல்.ஏ. தகவல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் ரூ.23½ கோடி செலவில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக விஜயதரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விளவங்கோடு தொகுதியில் உள்ள மலையோர சாலைகள் மழைக்காலங்களில் விரைவில் சேதமடைந்து விடுகின்றன. எனவே, சாலைகளை சீரமைக்க அதிகமான நிதி ஒதுக்க வேண்டும் என சட்டமன்ற கூட்ட தொடரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 2020-2021 நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விளவங்கோடு தொகுதியில் சாலைகளை சீரமைக்க மற்றும் சிறு பாலங்கள் கட்ட ரூ.23½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மார்த்தாண்டம் -பேச்சிப்பாறை சாலை ரூ.2 கோடியே 13 லட்சத்திலும், களியல்-நெட்டா சாலை ரூ.1 கோடியே 24 லட்சத்திலும், இடைக்கோடு -கண்ணுமாமூடு சாலை ரூ.3 கோடியே 7 லட்சத்திலும், அதங்கோடு சாலை ரூ.80 லட்சத்திலும், வன்னியூர்-பழஞ்சி சாலை ரூ.15 லட்சத்திலும் சீரமைக்கப்படுகிறது.

இதுபோல், அருமனை-பனச்சமூடு சாலை ரூ.3 கோடியே 45 லட்சத்திலும், கடையால் -பேச்சிப்பாறை சாலை ரூ.2 கோடியே 48 லட்சத்திலும், குழித்துறை- மடிச்சல் சாலை ரூ.3 கோடியே 6 லட்சத்திலும், திக்குறிச்சி- சிதறால் சாலை ரூ.98 லட்சத்திலும், அருமனை- திருவரம்பு சாலை ரூ. 28 லட்சத்திலும், படந்தாலுமூடு -மடிச்சல் சாலை ரூ.22 லட்சத்திலும், மூவோட்டுகோணம்-மத்தம்பாலை சாலை ரூ.24 லட்சத்திலும், குழித்துறை-ஆலஞ்சோலை சாலை ரூ.5 கோடியே 40 லட்சத்திலும் செப்பனிடப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ஜூலை மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு ஆகஸ்டு மாதம் பணிகள் நடைபெறும்.

இவ்வாறு விஜயதரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Leave a Reply