கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் குமரி வந்த போலீஸ் அதிகாரி அவர் தங்கிய விடுதிக்கு ‘சீல்’

நாகர்கோவிலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் குமரிக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சிக்கினார். மேலும், அவர் தங்கிய விடுதிக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. லாட்ஜ், ஓட்டல்களில் உள்ள அறைகளில் வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்க தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் (தங்கும் விடுதி) வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நாகர்கோவில் நகர்நல அதிகாரி கின்சால் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை அந்த லாட்ஜிக்கு சென்றனர். ஆனால் லாட்ஜின் முன்புற கேட் பூட்டப்பட்டு இருந்தது. உடனே அதிகாரிகள் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு அங்கிருந்தபடி செல்போன் மூலமாக அழைத்தனர். ஆனால் செல்போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த லாட்ஜின் முன்புற கேட்டை மற்றொரு பூட்டால் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். மேலும், ஊரடங்கு விதிமுறை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாததால் லாட்ஜ் பூட்டி ‘சீல்‘ வைக்கப்படுகிறது என்பதை அறிவிக்கும் விதமாக சிவப்பு நிற நோட்டீசையும் லாட்ஜ் வெளிப்புற சுவரில் ஒட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இதனை அறிந்த லாட்ஜ் உரிமையாளர், மாநகராட்சி ஆணையரை சந்தித்து பேசினார். அப்போது, தனக்குத் தெரியாமல் லாட்ஜ் ஊழியர்கள் வெளிநபர்களை தங்க வைத்ததாகவும், இனிமேல் இது போன்று நடக்காது என எழுதிக் கொடுத்ததாகவும் தெரிகிறது.

பின்னர் மாநகராட்சி ஊழியர்கள், லாட்ஜ் வெளிப்புற கதவை பூட்டி வைத்த சீலை அகற்றினர். அங்கு ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசும் அகற்றப்பட்டது. மேலும், அந்த லாட்ஜில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் யார், யார்? தங்கியிருந்தார்கள் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரியும் ஒருவர் என தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரியை, கோட்டார் போலீசார் பிடித்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நாகர்கோவிலில் பணியாற்றிய முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு என்பதும், இவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

வெளி மாவட்டத்தில் இருந்து வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் லாட்ஜில் தங்கி இருந்துள்ளார். மேலும், ஒரு உறவுக்கார பெண்ணை காண அந்த லாட்ஜில் தங்கி இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இவர் ஓய்வு பெறும் முன்பே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது தொற்று தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்து அவரை கன்னியாகுமரியில் உள்ள ஒரு முகாமில் தனிமைப்படுத்தினர். போலீஸ் அதிகாரியை குமரிக்குள் நுழைய உதவி செய்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave a Reply