குளச்சல் துறைமுகத்தில் மீன்வாங்க வந்தவர்களுக்கு 300 பேருக்கு சளி மாதிரி சேகரிப்பு

கொரோனா வைரஸ் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவாக இறைச்சி வாங்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் அதிகாரிகளிடையே இருந்து வந்தது.

அதே சமயத்தில், பொதுமக்களுக்கு அதிகம் நெருக்கடி கொடுக்க அதிகாரிகள் விரும்பவில்லை. எனவே, அங்கு வரும் பொதுமக்களிடம், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் அதிகாரிகள் வந்தனர்.

அங்கு, மீன் வாங்க வந்தவர்கள் மற்றும் மீன் வியாபாரிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி சளி மாதிரி சேகரிக்கும் பணி நடந்தது. குருந்தன்கோடு வட்டார பொது சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சளி மாதிரி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 300-க்கு மேற்பட்டோருக்கு சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சளி மாதிரி சேகரித்த பிறகே மீன் வாங்க அனுமதிக்கப்பட்டனர். அதே சமயத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த பணியின் போது கல்குளம் தாசில்தார் ஜெகதா, குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, குளச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சந்தோஷ், வட்டார மருத்துவர் எபர்லின், பங்குத்தந்தை மரிய செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜூத் ஆனந்த் மற்றும் துறைமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விசைப்படகு மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க செல்லவில்லை. கட்டுமர மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க வருபவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன் வாங்க வருகிறார்கள்.

மீன் வாங்கும் போது சமூக இடைவெளியை மறந்து விடுகிறார்கள். மேலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கூட்டம் அதிகமாக கூடியது. எனவே, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சளி மாதிரி சேகரித்த பிறகே துறைமுகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதே சமயத்தில், பொதுமக்களுக்கு முன் மாதிரியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர் என்று தெரிவித்தனர்.

Leave a Reply