என்னாது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பா?

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து கடந்த 19ம் தேதியில் இருந்து வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்களுக்கு சென்னையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் பயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கும், அவரின் காதலரான விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இது குறித்து அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நலமாக இருப்பதாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. நயன்தாரா கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்தே வீட்டில் தான் இருக்கிறார். விக்னேஷ் சிவனும் தேவையில்லாமல் வெளியே செல்வது இல்லை.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதில் இருந்தே நயன்தாரா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வைரஸின் தீவிரம் உணர்ந்து அவர் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில் அவரை பற்றி இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளது.

கொரோனா லாக்டவுனின்போது நயன்தாரா பற்றி வதந்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக நயன்தாரா மீண்டும் தன் முன்னாள் காதலரான பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. விஷால், கார்த்தியை வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்கினார் பிரபுதேவா. ஆனால் அந்த படம் துவங்கிய வேகத்தில் கைவிடப்பட்டது. இந்நிலையில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை பிரபுதேவா வேறு நடிகர்களை வைத்து இயக்குகிறார் என்றும், அதில் நயன்தாரா தான் ஹீரோயின் என்றும் கூறப்பட்டது.

இந்த தகவல் குறித்து அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷோ கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை தற்போதைக்கு எடுக்கும் ஐடியா இல்லை. அதனால் நயன்தாரா பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை என்றார். அந்த வதந்தி அடங்கிய வேகத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.

அந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை உறுதி செய்வில்லை. லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதன்முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அந்த படம் ஓடிடியில் அல்ல மாறாக தியேட்டர்களில் தான் ரிலீஸாகும் என்று பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply