கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு முக கவசங்கள், கையுறை டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறைகள் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார். மாவட்ட வன அதிகாரி மற்றும் அரசு ரப்பர் கழக பொதுமேலாளர் (பொறுப்பு) அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

அதைத்தொடர்ந்து, கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்திற்கு செல்லும் பாதையில் ரூ.3.50 கோடி செலவில் பாலம் கட்டப்பட உள்ள இடத்தை தளவாய்சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்கு உட்பட்ட வாழையத்துவயல் புதுநகரில் பெருஞ்சாணி நீர்த்தேக்க பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பில் 90 மீட்டர் தடுப்புசுவர் மற்றும் 1500 மீட்டரில் சாலை மேம்பாடு செய்து காங்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளதையும் பார்வையிட்டார்.

வாழையத்துவயல் புதுநகரில் பெருஞ்சாணி அணையிலிருந்து வரும் தண்ணீர் புதுநகர் நீர்த்தேக்கத்தின் வழியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. வெள்ளப்பெருக்கு காலத்தில் மறுகால் பாயும்போது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுவதால் இந்த நீர்த்தேக்க பகுதியில் தடுப்புசுவர் அமைத்தும், சாலை மேம்பாடு செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.

சாலை அமைக்கப்பட உள்ள இந்த பகுதி வனத்துறைக்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே வனத்துறையின் ஒப்புதல் பெற்றுத்தான் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால் வனத்துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சம் மதிப்பில் குழாய்கள் அடங்கிய தரைமட்ட பாலத்துடன் சாலை அமைக்கப்படும். இவ்வாறு தளவாய் சுந்தரம் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், உதவி வன அலுவலர் (பயிற்சி) ஹேமலதா, தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து தலைவர் பிராங்கிளின், தோவாளை ஒன்றிய கவுன்சிலர் மேரிஜாய், அரசு ரப்பர் கழக தொழில் நல்லுறவு அலுவலர் கிரேஸ், அறங்காவலர் குழு உறுப்பினர் பாக்கியலெட்சுமி, வக்கீல் சுந்தரம், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜி, உதவி பொறியாளர் கவிதா, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரமணி, சுகுமாறன், மகேஷ், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply