மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு- அய்யாக்கண்ணு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிவேல், செயலாளர் முருகன், பொருளாளர் கார்த்திகேயன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மேகராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே டெல்லி சென்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அப்போது உள்துறை மந்திரி அமித்ஷா, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சொன்னார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

எங்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்றால், மீண்டும் விவசாயிகளை டெல்லிக்கு அழைத்து சென்று எனது தலைமையில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்.

விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாறாக தற்போது பயிர் சாகுபடி செய்ய புதிய கடன் வழங்க வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.

நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.37.76 கொள்முதல் விலை வழங்க வேண்டும். எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகளின் நிலங்களை எடுக்கக்கூடாது. தற்போதுள்ள சாலையையே விரிவாக்கம் செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply