திருப்புவனத்தில் தெப்பக்குளம் பிரச்னை: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மட்டை ஊரணியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்தை நிர்வாகம் செய்ய விதிமுறைகளுக்கு முரணாக தனியார் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்புவனம் மட்டை ஊரணி இருந்த இடத்தில் தற்போது தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தை நிர்வாகம் செய்வதற்காக தனிநபர்கள் 11 பேர் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் திருப்புவனம் பகுதியில் சவடு மண் குவாரியிலிருந்து நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரியும் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர்ச் செயலாளர் நாகூர்கனி, மீனவரணி அமைப்பாளர் அண்ணாமலை, மதிமுக ஒன்றிய செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகி ஜெயராமன், விசிக ஒன்றிய செயலாளர் கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்ட பிரச்னைகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் கூறுகையில் மட்டை ஊரணியில் கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்துக்கு வரும் 26ந் தேதி குடமுழுக்கு நடக்கவுள்ளது.

பொதுமுடக்கம் உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அன்றைய தேதியில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்புவனத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply