சீனாவின் வரைப்பட ஆக்கிரமிப்பு விளையாட்டை இனியும் அனுமதிக்க முடியாது…. இனி அவர்கள் இழப்புகளை தாங்க வேண்டியது இருக்கும்… அதிகாரி தகவல்..

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியல் சீன வீரர்களால் நமது வீரர்கள் 20 வீரமரணம் அடைந்ததையடுத்து இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் 3,488 கி.மீட்டர் தொலைவு கொண்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதி மற்றும் கிழக்கு கடற்பரப்பில் இந்திய ராணுவம் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளது. அதேசமயம் சீனாவும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தனது ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு, தவுலத் பேக் ஓல்டி, சுஷுல் மற்றும் கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்திய ராணுவ அமைப்பு லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் போன்ற உஷார் நிலையை அறிவித்தவுடன் எந்தவொரு எதிர்பாராத தாக்குதல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பான தயார் நிலையில் உள்ளது. உதாரணமாக கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுபாட்டு பகுதியில் பார்வேர் ஏரியாக்களில் 15 ஆயிரம் வீரர்களை ராணுவம் குவித்துள்ளது.

இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது வீரர்கள் பின்வாங்க மாட்டார்கள். அங்கு நமது பிராந்திய ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் இருக்காது. தனது வரைப்பட ஆக்கிமிரப்பு விளையாட்டை சீனா அதிக முறை நீண்ட நாட்களுக்கு விளையாடியுள்ளது. சீனா நமது எல்லைக்குள் அத்துமீறி, தன்னிச்சையாக உரிமைகோரல்களை செய்கின்றன, மேலும் அவை உண்மை என மீண்டும் மீண்டும் கூறுகின்றன பின்னர் இந்தியாவை ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்கின்றன. இனி இதனை அனுமதிக்க முடியாது. சீன ராணுவம் இந்திய பிரதேசத்தை அபகரிக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் அது இனி இழப்புகளை தாங்க வேண்டியது இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply