சீனப் பொருள்களின் விளம்பரத்தில் நடிக்க வேண்டாம்: பிரபலங்களுக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

சீனப் பொருள்களின் விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் எனத் திரைத்துறை மற்றும் விளையாட்டுப் பிரபலங்களுக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக ராணுவத்தினரை குவித்து பிரச்னை செய்து வந்த சீனா மீது இந்தியா்களுக்கு கடும் அதிருப்தியும்,கோபமும் ஏற்பட்டது. இச் சம்பவத்துக்கு பின்னா் சீன நாட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களை ஈடுபட வைத்துள்ளது.

இதன் விளைவாக, சீன தலைவா்களின் புகைப்படங்கள், அந்நாட்டு தேசிய கொடி எரிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் சீன பொருள்கள் சாலையில் வீசி உடைக்கப்பட்டு, எரிக்கப்படுகின்றன.

சீனாவில் இருந்து பொம்மைகள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதை கொல்கத்தா இறக்குமதியாளா்கள் நிறுத்திவைக்க தொடங்கியுள்ளனா்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள், இந்து இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகள் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், சீன வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் முன்பும், பொது இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். சீன அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனப் பொருள்களின் விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் என திரைத்துறை மற்றும் விளையாட்டுப் பிரபலங்களுக்கு அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இக்கட்டான இச்சமயத்தில் சீனப் பொருள்களின் விளம்பரத்தில் திரைத்துறை மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் நடிக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறோம். இந்திய ராணுவத்தினரின் தியாகத்துக்கு மரியாதை தரும் விதமாக ஆமிர் கான், விராட் கோலி, தீபிகா படுகோன், கத்ரினா கயிப், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், சல்மான் கான் என சீனப் பொருள்களின் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம். அதேபோல சீனப் பொருள்களை வாங்கக்கூடாது, விற்பனை செய்யக் கூடாது என்கிற பிரசாரத்துக்கு சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், தோனி போன்ற பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 20 முக்கியப் பொருள்களில் சீனாவின் பங்கு 43 சதவீதமாக உள்ளது. இதில் ரூ.54,868 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகள், ரூ.22,861 கோடி மதிப்பிலான கணினிகள், ரூ.10,668 கோடி மதிப்பிலான மருந்து தயாரிப்பு மூலப்பொருள்களும் அடங்கும்.

Leave a Reply