குமரி மாவட்டத்தில் கராத்தே பயிற்சி வகுப்புகளை துவக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கராத்தே பயிற்சி வகுப்புகளை துவக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கராத்தே விளையாட்டு சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கராத்தே ஆசிரியர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆர். எம் .எஸ். திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு மூன்று மாதமும் தனியார் பள்ளிகளில் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இது தவிர ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கராத்தே வகுப்புகளில் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர். கொரானா தடை உத்தரவு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இதுபோன்ற பயிற்சி வகுப்புகள், மற்றும் பள்ளியிலும் பயிற்சிகள் நடைபெறவில்லை.

இதனால் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கடும் வருமான இழப்பை சந்தித்துள்ளனர். இதேபோன்று ஆரோக்கியத்தை பேணுவதற்காக வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடை காரணமாக சர்வதேச போட்டிக்கு தங்களை தயார்படுத்த முடியாமல் மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் வாடகை கூட கொடுக்க முடியாத அளவிற்கு பயிற்சியாளர்கள் பண நெருக்கடியை சந்தித்து உள்ளனர். எனவே இவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதோடு பயிற்சி வகுப்புகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply