இந்திய பகுதியை சீனா எப்படி ஆக்கிரமித்தது என்பதை பிரதமர் சொல்ல வேண்டும்.. சோனியா காந்தி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடான மோதலில் இந்திய ராணுவ வீரர்களில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மேலும் நாட்டு மக்களும் மிகவும் கொந்தளிப்புடன் உள்ளனர். அதேசமயம் லடாக்கில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆன்லைனில் லைவ்வாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய நிலப்பகுதியை சீனா எப்படி ஆக்கிரமித்தது, ஏன் 20 துணிச்சலான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர் என்பதை பிரதமர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். எத்தனை வீரர்கள் காயம் அடைந்தனர் அல்லது இன்னும் காணவில்லை என்பது தெரியவேண்டும்.

அரசுக்கு பின்னால் ஆதரவாக காங்கிரஸ் நிற்கும். நமது 20 வீரர்களின் உயிர் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. உயிர் தியாகம் செய்த துணிச்சலான அனைத்து வீரர்களுக்கும் என் இதயத்தின் மையத்திலிருந்து எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த வலியை எதிர்கொள்ள அவர்களது குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு சர்வவல்லமையுள்ளவர்களிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply